இனிமேல் புதிதாக பாவங்களை செய்யாதீர்கள்; ரணில், ராஜபக்ஷ தரப்புகளுக்கு எச்சரிக்கை.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறை செல்வார்கள் எனத் தான் நம்பவில்லை என்றும், ஏற்கனவே செய்த பாவங்கள் போதாது என அவர்கள் புதிதாகப் பாவங்களைச் செய்ய வேண்டாம் எனத் தான் கூற விரும்புகின்றார் என்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறை செல்வார்கள் என நான் கருதவில்லை. அவர்கள் ஏற்கனவே செய்த பாவங்கள் போதாதென்று, இப்போது புதிதாகப் பாவங்களைச் செய்ய வேண்டாம் என்றே அவர்களுக்குக் கூற வேண்டியுள்ளது. அவ்வாறு தொடர்ந்து செய்தால், அந்தப் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு அவர்களுக்குப் போதுமான காலம் இருக்காது.
ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் நாட்டில் திடீரென ஒரு பிரச்சினை உருவாக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி உடனடியாக மகாநாயக்க தேரர்களை அழைத்து மிகவும் பொறுமையாகவும் தெளிவுடனும் நிலைமைகளை விளக்கினார். கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் விருப்பப்படியே சட்டம் இயங்கியது தவறு என்றும், தற்போதைய நிலையில் அத்தகைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது சொந்த விருப்பத்துக்கேற்ப சட்டம் இருக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதி மிக உறுதியாக இருக்கின்றார்.
நிறைவேற்றுத்துறை, நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு மக்கள் வழங்கிய பொறுப்புக்களை அவற்றுக்கான உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றன. தற்போது நீதித்துறையினரும் ஜனாதிபதியும் தமக்கான பொறுப்புக்களைச் சரியாகச் செய்து வருகின்றனர்.” – என்றார்.


