உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேரர்களின் கௌரவத்தை நான் பாதுகாத்தே தீருவேன் : சஜித் சூளுரை!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
120 பார்வைகள்

“முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, புத்தசாசன அமைச்சையும் புத்தசாசன நிதியத்தையும் ஆரம்பித்து முன்னெடுத்ததன் மூலம் சம்புத்த சாசனத்துக்குச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சம்புத்த சாசனத்துக்கும் பௌத்த மதத்துக்கும் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றுக்கொடுத்து, அதைப் பாதுகாத்து, போற்றி முன்னேற்றி, ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களுக்கும் உரிய இடத்தையும் நிலைபேறுத்தன்மையையும் பாதுகாப்பையும் அவர் பெற்றுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பேன்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“புத்தசாசன அமைச்சைப்போலவே, ஏனைய மதங்கள் மற்றும் இனங்கள் தொடர்பில் கருத்தில்கொண்டு தனித்தனியான இராஜாங்க அமைச்சுகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவே உருவாக்கினார். இவ்வாறு உருவாக்கியதன் மூலம் அந்த மதங்கள், கலாசாரங்கள் மற்றும் இனங்களுக்கும் உரிய பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது. எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளே இடம்பெற வேண்டும். ஒரே நாட்டில் ஒரே குடிமக்களாக முற்போக்குத் தேசியவாதத்துடன் ‘இலங்கையர்’ என்ற அடையாளத்தை முதன்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று சியாம் மகா நிகாயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும், பன்னிப்பிட்டிய, ருக்மலேவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம விஜயலோக மகா விகாரையின் தலைமை விகாராதிபதியுமான சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். தொடர்ந்து இங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டின் ஒருமித்தப்பாடு, நிலப்புல ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அரசமைப்பில் உள்ள நாட்டின் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது போலவே ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

“மகா சங்கத்தினரைப் போலவே ஏனைய மதங்களின் மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அரசமைப்பின் ஊடாகவும் சம்புத்த சாசனத்துக்குச் சிறப்பு ஸ்தானம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மறந்துவிடக் கூடாது. இந்தக் கொள்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி நிற்கின்றது. மேலும், தற்சமயம் மகா சங்கத்தினரையும் காவியுடையையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அவமதிப்புச் சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுபோன்ற விடயங்களைச் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் காணப்படுகின்றன. இந்த விதிமுறைகளைக் கண்டறிந்து, உணர்வுப்பூர்வமான விடயங்களை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பரிந்துரைகளைப் பெற்று, பொருத்தமில்லாத செயற்பாடுகளைச் சரி செய்துகொள்ள வேண்டும்.

சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களான மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட ஏனைய தேரர்களின் ஆசிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்பச் செயற்படுவேன். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கு நான் எப்போதும் ஒரு நடைமுறை பௌத்தராக முன்னிற்பேன். பௌத்த மதத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைவதற்குப் பதிலாக, செயல்கள் மற்றும் பணிகளின் மூலம் பௌத்தராக இருக்க நடவடிக்கை எடுப்பேன். உண்மையான பௌத்தராக நடந்துகொள்ளும்போது ஏனைய மதங்கள், இனங்களுக்கு நிந்தனை செய்யும், அவற்றை அகௌரவப்படுத்தும் எண்ணம் மனதில் எழாதல்லவா.” – என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர்,

“வரலாற்றுக்காலம் தொட்டே நமது நாடு ஒரு பௌத்த நாடாகத் திகழ்கின்றது. பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். வரலாற்றுக்காலம் தொட்டே நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பௌத்த மதத்தை முதன்மைப்படுத்திய முன்னேற்றங்களையே அடைந்துள்ளது.

இலங்கையின் மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட 99 வீதமான பௌத்த பிக்குகள், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடையைக் களைவதற்கு முன்னர், அவர் சார்ந்திருக்கும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சங்க சபையிடம் ஆலோசித்திருக்க வேண்டிய கடமை காணப்பட்டிருந்தது. ஒரு பௌத்த துறவியின் காவியுடையைக் கழற்றும் அதிகாரம் மகா சங்கத்தினருக்கு மாத்திரமே காணப்படுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

157 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

146 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

136 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

135 0 0