ஞானசார தேரரை உடனே விடுவிக்கக் கோரி கண்டியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்.!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையைக் களைந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தியும் மகா சங்கத்தினரின் தலைமையில் பாதயாத்திரை ஒன்று இன்று சனிக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
பாதயாத்திரை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கண்டி – மகுல் மடுவ பகுதியில் விசேட ஆசீர்வாத வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தற்போதைய அரசால் தன்னிச்சையான முறையில் ஞானசார தேரருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த பூஜ்ய உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரர் நாட்டுக்காகவும் சாசனத்துக்காகவுமே குரல் எழுப்பிச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார் என்று சுட்டிக்காட்டினார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் வாரியப்பொல சுமங்கல தேரரின் சிலைக்கு அருகில் ஆரம்பமான இந்தப் பாதயாத்திரை, ஞானசார தேரர் சிறை வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வளாகம் வரை தொடர்ந்து செல்லவுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.
தற்போது நிலவும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் வன்முறையற்ற முறையில் பொதுமக்கள் அனைவரும் இந்தப் பாதயாத்திரையில் இணைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


