உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
76 பார்வைகள்

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோரின் பங்குபற்றலுடன், வட மாகாண பனை வடிசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (07) நாடாளுமன்ற வளாக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மதுவரித் திணைக்களத்தினால் அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் பல்வேறு கட்டணங்கள் காரணமாக வட மாகாணத்தில் இயங்கி வரும் சிறிய அளவிலான பனை வடிசாலைகள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த சில கட்டண உயர்வுகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சில கட்டணங்கள் ரூ.50,000 இலிருந்து ரூ.5 இலட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாரம்பரியமாக பனை வளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் பல வடிசாலைகள் தமது நடவடிக்கைகளைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணச் சுமைகளை தாங்க முடியாமல் சில வடிசாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக பெருமளவில் சேகரிக்கப்படும் பனையிலிருந்து பெறப்படும் கள்ளு உள்ளிட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்த முடியாமல் வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண மக்களின் பாரம்பரிய வாழ்வியலுடனும் பொருளாதார நடவடிக்கைகளுடனும் பனைத் தொழில் நெருக்கமாக இணைந்திருக்கின்றது.

பெரிய அளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும், பனை வளத்தை அடிப்படையாகக் கொண்டு சிறிய அளவில் பாரம்பரிய முறையில் உற்பத்தியில் ஈடுபடும் வடிசாலை உரிமையாளர்களுக்கும் ஒரே வகையான வரி மற்றும் கட்டண முறையை நடைமுறைப்படுத்துவது நியாயமானதல்ல என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பனைத் தொழில் என்பது வெறுமனே ஒரு உற்பத்தித் துறை அல்ல. வட மாகாணத்தின் மக்களின் வாழ்வாதாரம், பாரம்பரியம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்துடன் அது ஆழமாகப் பிணைந்துள்ளது. எனவே, பெரிய அளவிலான தொழில்துறை உற்பத்தியாளர்களுக்குப் பொருந்தும் அதே வரி மற்றும் கட்டண முறையை சிறிய அளவிலான பாரம்பரிய பனை உற்பத்தியாளர்களுக்கும் விதிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். இந்தத் துறையைப் பாதுகாத்து, வளர்ச்சியடையச் செய்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மேலும், பனை வளத்தை வீணாக்காமல் அதனை பெறுமதிசார் உற்பத்திகளாக மாற்றுவதற்கும், இத்துறையில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் வரி மற்றும் கட்டணக் கொள்கைகள் சாதகமானதாக அமைய வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், வட மாகாண பனை வடிசாலைகள் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள வரி மற்றும் கட்டண அதிகரிப்புகள் பொருத்தமானவை அல்ல எனத் தெரிவித்ததுடன், பனைத் தொழிலின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் என்ற ரீதியில் தேவையான சலுகைகளையும் ஆதரவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வட மாகாணத்தின் பாரம்பரிய பனைத் தொழில் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள நிலையில், அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்கள் காரணமாக அந்தத் துறை நலிவடைய அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பனைத் தொழில் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளை நாம் புரிந்துகொள்கிறோம். உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைத்து, இந்தத் தொழிலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவது அவசியம். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கத்தின் தரப்பில் முன்னெடுப்போம் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

அத்துடன், பெரிய அளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும் பாரம்பரிய பனைசார் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான உற்பத்தி அளவு மற்றும் தொழில் தன்மையை கருத்திற்கொண்டு, வரி மற்றும் உற்பத்திக் கட்டணங்களை வேறுபடுத்தி நிர்ணயிக்க வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்படும் மதுவரி, உற்பத்திக் கட்டணம், பாதுகாப்புக் கட்டணம் மற்றும் ஏனைய தொடர்புடைய கட்டணங்களை மீளாய்வு செய்து, துறைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய வரித் திணைக்களங்களின் அதிகாரிகள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரை உள்ளடக்கிய விசேட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தி, நடைமுறையில் உள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த உறுதியளித்தார்.

வட மாகாணத்தின் பனை வளத்தைப் பாதுகாப்பதுடன், அதனை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையை நவீனமயப்படுத்தி, உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

57 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

74 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

66 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

61 0 0