இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து
இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில் அமைப்புகளின் பேரவை’யின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (08) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
“நேற்றைய தினம் இந்நாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக மாறியுள்ளது. நாட்டில் இதுவரை காலம் இருந்துவந்த அரசியல் உயரடுக்கினரை (Political Elites) சட்டத்தின் முன் நிறுத்த முடியாது என்ற பிம்பமும் பொதுமக்களிடையே நிலவிவந்த ‘அவர்களும் ஒன்றுதான், இவர்களும் ஒன்றுதான்’ என்ற எண்ணமும் நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்துள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த உயரடுக்கு அரசியல் கலாசாரத்தையே பாதுகாத்து வந்தன.
அரசியல்வாதிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ளும் முறையே நிலவியது.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், இறுதியில் அந்த வழக்குகள் அனைத்தும் அமுக்கி வாசிக்கப்பட்டன.
அன்றைய காலப்பகுதியில் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கே அதிகாரிகள் சென்ற வரலாறே இருந்தது.
அதேபோல், ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைப்பதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ, இறுதியில் ரணிலிடமே ஜனாதிபதி பதவியை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் இந்த உயரடுக்கு அரசியல்வாதிகளைத் தொட முடியாது என்ற நிலையை முற்றாக மாற்றியமைத்துள்ளது. ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதன் மூலம், இந்த ஊழல் நிறைந்த மாஃபியா அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மொட்டு கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாகப் பேரணியாக வந்த கூட்டத்தினரை நாம் கண்டோம். ஆனால் நேற்று நீதிமன்றத்திற்கு முன்பாக அப்படி எவரையும் காணமுடியவில்லை.
எனவே, எதிர்காலத்தில் அரசியல் செய்ய வருபவர்கள் திருட்டு, மோசடி, ஊழல், வன்முறை மற்றும் கொலைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் பலமுறை சிந்திக்க வேண்டியிருக்கும்.
உணர்ச்சிவசப்பட்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள், இறுதியில் தனித்தனியாகவே அதற்கான விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” என அவர் தெரிவித்தார்.