மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?
கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“செட்டியார் தெருவில் திருட்டு நகை தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸார் அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை ஒளிப்பதிவுகளைக் கொண்டு அடையாளம் கண்டு கைது செய்து மத்திய கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்துத் தாக்குகின்றனர்.
போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு. போராட்டம் நடத்துவதற்குக் கற்றுக்கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி அரசு தற்போது போராட்டம் நடத்தியவர்களைத் தாக்குவது வெட்கக்கேடானது.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் எமக்கு வாக்குறுதியளித்துள்ளனர். அதற்கமைய அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் நாமும் போராட்டத்தில் களமிறங்குவோம்.” – என்றார்.
மனோ கணேசன் எம்.பியின் கருத்துகளுக்குச் சபையில் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.