வலுசக்தித் துறையில் அரசு வெற்றிப் பயணம்.!
வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்குச் செயற்றிறனுடன் சேவையாற்றுவதே அரசின் எதிர்பார்ப்பாகும் எனவும், அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஜெட் ஏ – 1 குழாய் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்துக்கு உரிய இரண்டு புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விநியோகச் செலவைக் குறைத்தல் மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பவற்றுக்காக இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முத்துராஜவெல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் வகையில், 21 கிலோமீற்றர் நீளமும் 10 அங்குல விட்டமும் கொண்ட நிலத்தடி குழாய் மூலம் விமான எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் 30 மாதங்களில் நிறைவுபெறும்.
92 ஆயிரம் கன மீற்றர் மொத்த கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பெரிய தாங்கிகள் (ஒவ்வொன்றும் 30 ஆயிரம் கன மீற்றர்), இரண்டு நடுத்தர தாங்கிகள் (ஒவ்வொன்றும் 15 ஆயிரம் கன மீற்றர்) மற்றும் 2 ஆயிரம் கன மீற்றர் கொண்ட மேலதிக தாங்கி ஆகியவை அடங்கும்.
சி.பி.எஸ்.ரி.எல். மூலம் முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய சேமிப்புத் தாங்கிகளை (தலா 15 ஆயிரம் கன மீற்றர் கொள்ளளவு கொண்ட 2 தாங்கிகள் மற்றும் 10 ஆயிரம் கன மீற்றர் கொள்ளளவு கொண்ட 1 தாங்கி) அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இந்தத் திட்டம் 18 மாதங்களில் அதாவது 2028 ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும்.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக உரையாற்றும்போது,

“நாம் இன்று வலுசக்தி பரிமாற்ற யுகத்தில் இருக்கின்றோம். உலகம் மிக வேகமாக சுத்தமான வலுசக்தி பயன்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 2029 ஆம் ஆண்டளவில் சூரிய சக்தி மூலம் 1200 மெகாவாட் மின்சாரத் திறனை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்களும் எரிபொருள் மற்றும் மின்சார நுகர்வு முறையை மாற்றியமைத்து, மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது எரிபொருள் பாதுகாப்பிற்குப் பாரிய உதவியாக அமையும்.” – என்றார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உரையாற்றும்போது,

“மத்திய கிழக்கு யுத்த காலத்தில் சர்வதேச சந்தையில் விலைகள் பாரியளவில் அதிகரித்தபோதிலும், அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கி விலைகளைக் கட்டுப்படுத்தியது. எரிபொருள் குறைந்த விலையில் வழங்கப்பட்ட போதிலும், கூட்டுத்தாபனம் கடந்த வருடம் 36 பில்லியன் ரூபாவாகவும், இந்த வருடம் 28 பில்லியன் ரூபாவாகவும் இலாபம் ஈட்டியுள்ளது. இந்த இலாபத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், குழாய் கட்டமைப்புகளை முறைப்படுத்துதல் மற்றும் புதிய சேமிப்புத் தாங்கிகளை அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.” – என்றார்.
இந்த நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் குமார ஜயகொடி, அமைச்சின் செயலாளர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








