எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை.!
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் காசுப் பிணையிலும் தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
அத்துடன், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.
மேலும், வழக்கின் சாட்சிகளுக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கக் கூடாது எனவும் மற்றொரு பிணை நிபந்தனையாக நீதவானால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.