அனோஜனை மீட்க சவூதி மன்னரிடம் கோரிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சவூதி மன்னரிடம் கோரிக்கையை முன்வைப்பதற்காக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சட்டத்தரணிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களினூடாக சவூதி மன்னரிடம் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழுவொன்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து, அதனை சவூதி அரசாங்கத்திடம் முன்வைக்கத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இடையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் சவூதி வெளிவிவகார அமைச்சருடன் இது தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்புகளுடனும் இணைந்து பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நாள் முதல், சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தேவையான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது.
இது மற்றொரு நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட விடயம் என்பதால், அந்த நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனடிப்படையில், இந்த வழக்கில் இரண்டு மேன்முறையீடுகள் முன்வைக்கப்படவுள்ளதாகவும், ஒன்று இலங்கை இளைஞரின் தரப்பிலும் மற்றொன்று சவூதி அரச தரப்பிலும் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு மேன்முறையீடுகளையும் பரிசீலித்த பின்னரே இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை இளைஞரின் உயிரைக் காப்பாற்றி அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியமான அனைத்து வழிகளிலும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.