மேல் மாகாணத்தில் மெட்ரோ பேருந்துகளை சேவையில் இணைக்கும் நிகழ்வு.!
கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், மேல் மாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் ஊடாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 112 மெட்ரோ பேருந்துகளை சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (29) முற்பகல் தலங்கம மெட்ரோ பேருந்து டிப்போ வளாகத்தில் இடம்பெற்றது.
நவீன மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கையின் பொதுப் போக்குவரத்து துறைக்கு நவீன பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்காக வசதியான தாழ்தள 100 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கமைய, நாட்டை வந்தடைந்த 104 பேருந்துகளும், ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 08 பேருந்துகளும் இன்று முதல் இவ்வாறு சேவையில் இணைக்கப்பட்டன.
இந்தப் புதிய பேருந்துகள் கொழும்பை மையமாகக் கொண்ட 7 வீதிகளின் ஊடாக இயக்கப்படுவதுடன், பயணிகள் குறிப்பிட்ட வீதிகள் மற்றும் நேர அட்டவணைகளின்படி தங்களது செல்லிடங்களை சென்றடையும் வகையில் சேவைகள் செயற்படுத்தப்படும்.
கொழும்புக்குள் பிரவேசிக்கும் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் குறிப்பாக ஒருவர் மட்டும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் இந்தப் புதிய பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கமாகும்.

