வைத்தியர் சுகுணனுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பத் தடை!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் வைத்தியர் சுகுணனைப் பற்றிய எந்தவொரு தடைசெய்யப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய கூடாது எனவும் அக்டோபர் மாதம் 12ம் திகதி ஆறு பிரதிவாதிகளையும் மன்றில் தோன்றுமாறும் நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சனையை தொடர்ந்து வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிராக பகிரப்பட்ட கூற்றுக்கள் தொடர்பாக வைத்தியர் சுகுணன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இந்த வழக்கானது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ஜுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் உட்பட ஆறு பேருக்கு எதிராகவும், இரண்டு யூரியுப் மற்றும் முகப்புத்தக தளங்களுக்கு எதிராகவும் இந்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்நிலைகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கமானது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அண்ணாத்துரை சுதர்சினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்று ராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹாரிஸ் உட்பட இன்னும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக நிபந்தனைக்குட்பட்ட கட்டளை ஒன்றை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்திருக்கின்றது.
அதாவது உடனடியாக வைத்தியர் சுகுணனைப் பற்றிய எந்தவொரு தடைசெய்யப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில், வழக்கு முடிவுறும் வரைக்கும் பதிவு செய்ய கூடாது என நீதிபதி தெரிவித்ததாக சட்டத்தரணி கனகலிங்கம் கிஸோபனா தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கானது எதிர்வரும் அக்டோபர் மாதம் 12ம் திகதி காரணம் காட்டலுக்காகவும், மற்றும் ஆறு பிரதிவாதிகளையும் மன்றில் தோன்றுமாறும் நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் சார்பாக சட்டத்தரணி கனகலிங்கம் கிஸோபனா ஆஜாராகியமை குறிப்பிடத்தக்கது.