திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பிலும் போராட்டம்!
யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதை கண்டித்தும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.
காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெருமளவான பொதுமக்கள்,அரசியல்வாதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்க உறுப்பினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,
“திலீபன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்”, “சிலையை அகற்றுவது அடிப்படை உரிமை மீறலாகும்”, “நினைவுகளை அழிக்காதே, நினைவு கூறும் உரிமையை மறுக்காதே” போன்ற கோஷங்கள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், “சிலையகற்றும் செயல் அல்ல் தமிழ் மக்களின் உரிமையை மதிப்பதே உண்மையான நல்லிணக்கம்” என்றும், “ஒரே நாடு ஒரே சட்டம் எனின் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும்” என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகளும் பண்பாட்டுச் சுதந்திரமும் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாகவும், அகற்றப்பட்ட திலீபனின் சிலையை உடனடியாக மீண்டும் அதே இடத்தில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத்,மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பிரதேசசபையின் தவிசாளர்கள்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எஸ்.சிவயோகநாதன்,அருட்தந்தை லூக் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது யாழில் அனுர அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் மீண்டும் அதே இடத்தில் சிலையினை நிறுவுவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.













