அருவித்தோட்டத்தில் மக்களின் காணிகளில் எல்லையிடும் வனவள திணைக்களத்தின் செயற்பாடு சத்தியலிங்கம் எம்.பியின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!
வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் வனவள திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்கள் இடுவதாக அருவித்தோட்டம் கமக்காரர் அமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் கவனத்திற்கு கடந்த 22.09.2026 அன்று கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு சத்தியலிங்கம் எம்பி கலந்துரையாடியிருந்தார். வனவள திணைக்களத்தின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை பற்றியும் வனவள திணைக்களம் தன்னிச்சையாக செயற்படுவது பற்றியும் விசனம் தெரிவித்திருந்ததுடன் குறித்த கல்லிடும் செயற்பாட்டினை நிறுத்துவது தொடர்பிலும் கலந்தாலோசித்திருந்தார்.
தொடர்ந்து மாவட்ட வனவள உத்தியோகத்தருடனும் தொடர்புகொண்டு இதுதொடர்பில் பிரஸ்தாபித்திருந்தார்.
இதனையடுத்து அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட வனவள உத்தியோகத்தர்கள் உத்தரவுக்கமைய குறித்த கல்லிடும் செயற்பாடானது உடனடியாக நிறுத்தப்பட்டது. அதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கும் அறியப்படுத்தப்பட்டது.
இதன்பிற்பாடு குறித்த விடயம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் அருவித்தோட்டம் கமக்காரர் அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியதுடன் தமது நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.
வனவள திணைக்களத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பில் சத்தியலிங்கம் எம்பி தொடர்ச்சியாக எதிர்ப்பினை தெரிவித்துவரும் நிலையில் அண்மைக்காலமாக மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களின் போதும் வனவள திணைக்களத்தினருக்கு எதிராக மக்களின் காணி விடயங்களுக்காக குரல்கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.