இது ஜனநாயகத்தின் கொ@லைகார அரசு – சஜித் கடுமையாகச் சாடல்
சமூக ஒப்பந்தம் மற்றும் முறைமை மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிமன்றத்தின் சுதந்திரத்தைச் சீரழித்து, ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரமானது நாட்டின் நீதிமன்றத்தைத் தனது அடிமையாகவும் ஏவல் ஆளாகவும் மாற்றிக் கொண்டு, நீதிபதிகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைத்து, சட்டத்தின் ஆட்சியை இல்லாமல் செய்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மனித மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் ஜனநாயகக் கட்டமைப்புகளைச் சீர்குலைத்து வரும் இந்த அரசும் ஜனாதிபதியும், ஜனநாயகத்தின் கொலைகாரர்களாக வரலாற்றில் பதிவாவார்கள் என்றும், ஜனநாயகத்தைக் கொல்வதற்கான காப்புரிமை இந்த அரசுக்கே கிடைக்கும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
சர்வதேசத் தரப்படுத்தல்கள் குறித்து அரசு பெருமையாகப் பேசினாலும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை இன்றும் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகளைச் சந்தித்து உண்மையான யதார்த்தத்தை அறிந்துகொள்ளுமாறும் சவால் விடுத்தார்.
ஓட்டோ சாரதிகள், சுயதொழில் புரிவோர் மற்றும் தொழில்துறையினர் நாட்டைவிட்டு வெளியேறி வருவதுடன், பன்னாட்டு நிறுவனங்களும் தமது தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு நபருக்கு வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதுமானது என்ற அடிப்படையில் அரசு கொள்கைகளை வகுப்பது ஏமாற்று வேலையாகும் என்றார்.
நாடு நல்ல நிலையிலும் மக்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கூறுமானால், வீண் பெருமைகளை விடுத்து மக்களின் கருத்தை அறிய உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்காது அமைச்சர்கள் சிரித்துத் காலம் கடத்துகின்றனர் என்றும், 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையை இந்த அரசு கேலிக்கூத்தாகக் கருதுகின்றது என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் குற்றம் சாட்டினார்.