தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை துரிதப்படுத்துக.!
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரது வலியுறுத்தலையடுத்து, குறித்த தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக குறித்த பகுதிகளுக்கு விரைவில் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 21.09.2026 நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
ஏற்கனவே தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் எம்மால் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அந்த கிராமங்களுக்குரிய மக்களும் தம்மை தமது கிராமங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றுவதற்கு பிரதேச செயலகத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், அக்கிராம மக்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தையும் அறிய விரும்புகின்றேன்.
குறித்த தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களை துரிதகதியில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் இதன்போது பதிலளிக்கையில்,
குறித்த தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கடந்த 22.07.2026 அன்று உரிய மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம்.
அந்தவகையில் அந்த மக்களிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தோம். அதற்கமைய அந்த மக்களால் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, திகதி ஒன்றினைத் தீர்மானித்து, குறித்த பகுதிக்கு அந்த மக்களுடன் நேரில் சென்று கள ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.
உரியவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களை வைத்தே, எம்மால் உரியவகையில் காணிகளை பகிர்ந்தளிக்க முடியும். ஏனெனில் ஒரு காணிக்கு பலர் உரிமைகோரினால் எம்மால் தீர்மானங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை தோன்றும். அவ்வாறான காரணங்களினாலேயே இந்த மீள்குடியேற்ற விடயம் தாமதமாகிக்கொண்டு செல்கின்றது.
எனவே தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதலில் நேரடி களஆய்வொன்றை மேற்கொண்டு, இணக்கப்பாட்டுடன் ஆவண ரீதியாக மக்களுக்கு அதே இடங்களில் காணிகளை வழங்குவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானமொன்றினை மேற்கொள்வோமென காணி உத்தியோகத்தர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில் களஆய்வு மேற்கொள்வது நல்ல விடயமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த கள ஆய்விற்கு அந்தப் பகுதிக்குரிய மக்களுடன் தம்மையும் அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
குறித்த களஆய்விற்கு அனைத்து தரப்பினரையும் அழைத்துச் சென்றாலே முடிவுகளை எடுப்பதில் தமக்கும் இலகுவாக இருக்கும் எனத் தெரிவித்த காணி உத்தியோகத்தர், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கள ஆய்விற்கு அழைப்பு விடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.