தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவது காலத்தின் தேவை.!
இனம், மதம், மாகாணம், மாவட்டம், கிராமம் மற்றும் நகரம் எனப் பிரிந்து நிற்காமல் இலங்கையர்களாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும். இந்நடவடிக்கையில் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது அத்தியாவசியமான ஒரு விடயமாகும். சாதி மற்றும் மத பேதங்களின்றி மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இனம், மதம் அல்லது ஏனைய இனக்குழுக்களின் பின்னணிகளின் அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல், ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் உரிமைகள், கௌரவம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே தேசிய நல்லிணக்கத்தின் அடிப்படை விடயமாக அமைந்து காணப்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களையும் சேரந்த மக்கள் முகங்கொடுத்துள்ள சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கவனம் செலுத்தினார். சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் தொடர்பான சம்பவம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கருத்துத் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒரு இலங்கையராகத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வேலுசாமி இராதாகிருஷ்னண், முஜிபுர் ரஹ்மான், எம்.எஸ்.உதுமா லெப்பே, டாக்டர் இளையதம்பி ஶ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இம்ரான் மஹ்ரூப், கவீந்திரன் கோடீசுவரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் பங்கேற்றனர்.




