முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது.!
முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று திங்கட்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் ஊடாக பொஸ்பேட் உரத்தை ஏற்றுமதி செய்வதற்காக, உரிய அரசாங்க நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாகத் தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியதாகவும், அதற்கான ஏற்றுமதி உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடுகளைச் செய்துகொடுத்ததாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோதச் செயலுக்கு குறித்த நிறுவனங்களிடமிருந்து ரூபா 8.1 மில்லியன் இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.