வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தென்மராட்சி, கச்சாய் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று (20.06.2026) சனிக்கிழமை இரவு மிக பிரமாண்டமான முறையில் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
ஈழம் மற்றும் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்புடன் நள்ளிரவு வரை நீடித்த இசைச் சங்கமமும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் விழாவிற்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தின.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக, ஈழம் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த முன்னணி தவில், நாதஸ்வர வித்துவான்கள் இணைந்து வழங்கிய விசேட இசைச் சங்கமம் நள்ளிரவு வரை அரங்கேறியது.
நாதஸ்வர இளவரசன் வட்டூர் N.R. தர்சனன் (சனா), நாதஸ்வர ஸ்வர வேந்தன் நாவலடிபூர் K. கயானன் ஆகியோர் தங்களது நாதஸ்வர இசையால் ஆலய வளாகம் முழுவதையும் பக்தி மழையில் நனையச் செய்தனர்.
தவில் நாத சொற்கலை வேந்தன் இணுவையூர் பா. நர்மதன் (மது), தவில் சொற்செல்வன் கோண்டாவில் R. சிவகரன், சொற்கவை இளவரசன் ஈழநல்லூர் பிரசாத் சச்சின், தவில் நாத இளவரசன் இணுவையூர் நர்மதன் பிரஜித், இசை நாத இளவரசன் ஈழநல்லூர் சிவதாசன் பவித்ரன் ஆகியோரின் அதிரடித் தவில் வாசிப்பு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த முன்னணி வித்துவான்களான V. சரவணன் மற்றும் S. சரவணன் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பு, இந்த இசை விழாவிற்கு மேலும் சர்வதேசத் தரத்தையும் பெருமையையும் சேர்த்திருந்தது.
இசைக் கச்சேரியைத் தொடர்ந்து, விழாவின் மற்றுமொரு விசேட அம்சமாக சிந்துபுரம் நாகப்பூ ஆற்றுகை கலைஞர்கள் வழங்கிய பாரம்பரிய “பொம்மலாட்ட” கலை நிகழ்ச்சி பக்திப்பூர்வமாக மேடையேற்றப்பட்டது. பழைமை மாறாத இந்த மரபுவழிக் கலைவடிவம், இளைய தலைமுறையினர் உட்பட அங்கிருந்த அனைத்துப் பக்தர்களின் பாராட்டுக்களையும் பெற்றது.
இவ்விழாவிற்கான ஒலியமைப்பு மற்றும் ஒளியமைப்பினை கச்சாய் K.K.A Sounds, Lights நிறுவனம் மிக உயர்தரமான முறையில் வழங்கியிருந்தது. மின்னொளி அலங்காரமும், துல்லியமான ஒலியமைப்பும் விழாப் பகுதிக்கு மேலதிக பொலிவைக் கொடுத்தன.
7ஆம் திருவிழா உபயகாரர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் இணைந்து, வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான அத்தனை வசதிகளையும் செம்மையான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணகி அம்மனின் அருள் வேண்டித் திரண்ட பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் நேற்று இரவு நடைபெற்ற இந்தத் திருவிழா வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக நிறைவு பெற்றது.
















