ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீதிமன்ற வீதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மாலை சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்று மாலை சிறுமியும் அவரது சகோதரனும் மட்டுமே தனியாக இருந்த நிலையில், தந்தை வெளியில் இருந்து வீட்டுக்கு சென்றபோது குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள ஒரு தொட்டியில் சிறுமி கிடப்பதை அவதானித்துள்ளார்.
இந்நிலையில் தந்தை சிறுமியை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்தபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றிருந்த நிலையில், சிறுமி தனது தந்தையுடன் இருந்துவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










