“முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெளியே வரும் வரை காத்திருப்பது எமது நோக்கமல்ல. கூடிய விரைவில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே எமது தேவையாகும். முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பாதுகாப்பில் அவர் உள்ளாரா என்பது எமக்குத் தெரியாது.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,
“முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பான சகல தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் இலக்காகும்.
தேசபந்து தென்னக்கோன் மாத்திரமின்றி இன்னும் சிலர் இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர். ஆனால், தேசபந்து தென்னக்கோன் எங்கிருக்கின்றார் என்பது எமக்குத் தெரியாது.
அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அவற்றைப் பொலிஸாருக்கு வழங்க வேண்டும். அது மக்களினதும் ஊடகங்களினதும் பொறுப்பாகும்.
அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கின்றோம். எனினும், தேசபந்து தென்னக்கோன் சரணடைவதற்கென கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை.
அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பல பொலிஸ் குழுக்கள் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேசபந்து தென்னக்கோன் வெளியில் வரும் வரை காத்திருப்பது எமது நோக்கமல்ல. முடிந்தளவு விரைவாக அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதே எமது தேவையாகும்.” – என்றார்.