குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது மனைவியைக் கூர்மையான கத்தியால் குத்தியும், தலையில் கல்லால் தாக்கியும் கொ லை செய்துள்ளார் என்று நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை 1:30 மணியளவில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி, செம் ரோக் பகுதியைச் சேர்ந்த கயானி தில்ருக்ஷி குமாரி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மேற்படி பெண்ணைக் கொ லை செய்தார் எனக் கருதப்படும் பெண்ணின் 42 வயதான கணவர் நேற்றுக் காலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மேற்படி தம்பதியினரின் மூன்று குழந்தைகளும் நாவலப்பிட்டியின் பல்லேகம பகுதியில் வசித்து வந்தனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பெண்ணின் கணவருக்குத் தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் கடந்த மூன்று மாதங்களாகப் பிரிந்து வசித்து வந்துள்ளனர் .
இந்தக் காலப்பகுதியில் மேற்படி பெண் கொழும்பு பகுதியில் வேலை செய்து வந்தநிலையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தனது திருமணமான மகளின் வீட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் மனைவியைச் சமாதானம் செய்யும் நோக்கத்துடன் தனது முச்சக்கர வண்டியில் மனைவி இருக்கும் இடத்துக்குச் சென்றுள்ளார் .
இந்தச் சந்தர்ப்பத்தில் மனைவி யாரோ ஒரு நபருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், கோபமடைந்த அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார். கத்தி உடைந்ததால், மேலும் ஒரு கத்தியை எடுத்து தனது மனைவியைக் குத்தியுள்ளதோடு, காப்பாற்ற வந்த தனது மகளையும் கத்தியால் தாக்கி, பின்னர் ஒரு பெரிய கல்லை மனைவியின் தலை மீது போட்டுள்ளார்.
சந்தேகநபருக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரும் அவரது மகளும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.