நாடாளுமன்றத்தை உடனே கலைத்து புதிய தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.!
தேசிய மக்கள் சக்தி அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறிவிட்டது என்றும், அரசின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆணை இல்லாததால் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த அரசால் மூன்றாவது வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்போது, ஏற்பட்டுள்ள பொருளாதார வறுமை நிலையில் தங்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நிவாரணங்கள் எதனையும் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கவில்லை.
2022ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்தடைந்தது. அந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம் என்று அரசின் அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் 2022இல் ஆட்சியைப் பெறவில்லை. 2024 செப்டெம்பரிலேயே ஆட்சியை ஏற்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்.
இப்போது பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 வீதமாக இருக்கின்றது. ஆனால், 2022ஆம் ஆண்டை விடவும் குறைவாகவே இருக்கின்றது. கடந்த 2 வருடங்களில் நீங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளீர்கள்? நீங்கள் 2022ஆம் ஆண்டு தொடர்பில் இப்போது கதைக்க வேண்டாம்.
அத்துடன், 2024ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி நிதி கையிருப்பானது 6 பில்லியன் டொலராக இருந்தது. 2026ஆம் ஆண்டில் அது 7 பில்லியனாக இருக்கின்றது. இரண்டு வருடங்களில் ஒரு பில்லியன் டொலர் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பெற்றோல் விலை 309 ரூபாவாக இருந்தது. இப்போது 424 ரூபாவாக இருக்கின்றது. அதேபோன்று டீசல், சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலைகளும் 2024இல் இருந்ததை விடவும் அதிகமாகவே அதிகரித்துள்ளன.
அதேபோன்று, பணவீக்கத்தை எடுத்துக்கொண்டால் 2024ஆம் ஆண்டில் 0.45 வீதமாக இருந்தது. இன்று அது 8.3 வீதமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நீங்கள் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றீர்கள். 2024ஆம் ஆண்டில் டொலர் விலை 292 ரூபாவாக இருந்தது. இப்போது 337 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. அப்படியென்றால், எங்கே நீங்கள் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்கின்றோம்.
அஸ்வெசும கொடுப்பனவும் 10 இலட்சம் பேருக்கு நீக்கப்பட்டுள்ளது. இவர்களால் இரண்டு வருடங்களில் தமது சட்டைப் பொத்தான்களைப் போட்டுக்கொள்ள முடியாமல் போனதை மட்டுமே செய்ய முடிந்துள்ளது. ஆனால், மக்களின் சட்டைகள் வயிற்றுடன் ஒட்டிப்போகும் அளவுக்கே உள்ளது.
ஜனாதிபதிப் பதவியும் பிரதமர் பதவியும் இருந்தால் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று ஜனாதிபதி கூறியிருந்தார். இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கிடைத்துள்ளது. எனினும், நீங்கள் வெறுமனே கொக்கரித்துக்கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் பெரிய கனவு உலகத்தை உருவாக்கினீர்கள். இப்போது நீங்கள் ஈரான் யுத்தம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி காலம் கோருகின்றீர்கள்.
உங்களின் விஞ்ஞாபனத்தில் கூறியது இதுவல்ல. 6 மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்புவதாகவே கூறினீர்கள். ஆனால், நீங்கள் அந்த விஞ்ஞாபனத்தை மீறியுள்ளீர்கள். இதனால் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தல் விஞ்ஞாபனத்துக்குப் போவோம் என்று நாங்கள் அரசுக்குப் பிரேரணை முன்வைக்கின்றோம்.” – என்றார்.


