நண்பனைக் கொ**லை செய்த இளைஞன்.!
காலி – ஹிக்கடுவைப் பகுதியில் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாகத் தனது நண்பனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத ஆத்திரத்திலேயே இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனுக்கும் அவரது நண்பரான 29 வயதுடைய இளைஞருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீண்டகாலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, ஆத்திரமடைந்த நண்பர் தன்னிடமிருந்த கூரிய கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த 28 வயது இளைஞன், உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்தைச் செய்த பின்னர் 29 வயதுடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமையுடன் தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


