உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் திட்டங்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
147 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரையான காலப்பகுதியில் அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளையும் குறிப்பிடவில்லை எனவும், நம்பிக்கை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மக்களுக்கான நியாயம் வழங்குதல் மற்றும் கடந்த கால யுத்த நெருக்கடிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதிப் பொறுப்புகளைக் கூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை என்பதும் பாரியதொரு குறைபாடாகும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கார்த்திகை மாதம் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலியைச் செலுத்திக்கொண்டும், அண்மையில் காலமான தமிழ்த் தேசியப் பற்றாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கும் அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

வரவு – செலவுத் திட்டம் என்பது எண்களையோ, கணக்குகளையோ, திட்டங்களையோ மட்டும் முதன்மைப்படுத்தியதாக அல்லாமல், நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை, நம்பிக்கை, வாழ்வதற்கான சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகப் பார்க்கப்பட வேண்டும்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்பவும், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான புவிசார் அரசியல் சூழ்நிலையில் இந்த அரசு பல விடயங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றை நடைமுறைப்படுத்த முயல்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் 13 ஆயிரம் குடும்பங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் வரவேற்கத்தக்கது. கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திற்கான குடிதண்ணீர் திட்டம், பேசாலைத் துறைமுகத்திற்கான நிதி ஒதுக்கீடு, குறிஞ்சாக்கேணி உப்பளத்தை மீள் அமைப்பதற்கான திட்டம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான அபிவிருத்தி, பாலங்கள் அமைக்கும் திட்டம், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்கான முயற்சி போன்ற நல்ல விடயங்களை முன்வைத்துள்ள போதும், பல விடயங்கள் பல நெருக்கடிகளை ஏற்படுத்துவதாகவே உள்ளன.

மக்களுக்கான மானியத் திட்டங்கள் மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்கான முதலீடுகளைக் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு இருந்த போதும், மக்களுக்கான மானியங்களை வழங்குவதில் குறைபாடுகள் நிலவுகின்றன. அத்துடன், மக்களுக்குச் சம்பளத்தை வழங்கும் முறைகளில் பல நெருக்கடிகளைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு கையால் கொடுத்து மறு கையால் பெறுவது போன்று காணப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர். அந்தவகையில் அந்தப் பகுதிகளுக்குப் பல திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருந்த போதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் இருக்கின்றன. இதனால் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் நிதி மூலங்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லாமையினால் அவை திறைசேரிக்குத் திரும்பச் சென்றுவிடுமா என்ற சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான திட்டங்களைக் கண்காணிப்பதற்குப் போதுமான பொறிமுறை அமைக்கப்படவில்லை.

நாட்டில் வாழும் மக்களின் எதிர்கால நிச்சயத்தன்மை என்பது வரவு – செலவுத் திட்டத்தில் பொருளாதார உரிமைகளில் மட்டும் தங்கியதாக இல்லை. அவர்களின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அரசியல் உரிமைகளைத் தாங்கியதாகவே நாட்டு மக்களின் எதிர்கால நிச்சயத்தன்மை உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் தமிழ் மக்கள் கல்வி கற்ற பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்கான காரணம் என்னவென ஆராயப்பட வேண்டும். அந்த விடயங்கள் வரவு – செலவுத் திட்டத்தில் பின்னடைவான விடயங்களாக இருக்கின்றன.

அரசு 2 வருடங்களைக் கடந்துள்ள போதும் அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளையும் குறிப்பிடவில்லை. அத்துடன், நம்பிக்கை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மக்களுக்கான நியாயம் வழங்குதல் மற்றும் கடந்த கால யுத்த நெருக்கடிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதிப் பொறுப்புகளைக் கூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.

மாகாண சபைகள் அதிகாரங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காகக்கூட இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் உங்களை நம்பி வாக்களித்த வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் இருப்புக்கான எதிர்காலம் தொடர்பில் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் என்ன விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது?

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், அந்த விடயங்கள்கூட இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ஒவ்வொரு எண்ணக்கருக்கள் அல்லது கொள்கைகள் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டில் அதிகாரப் பங்கீடும், அந்த மக்கள் நம்பிக்கையுடன் வாழ்வதற்குமான ஒருமைப்பாடும் இங்கு கூறப்பட்டிருக்க வேண்டும். எல்லா மக்களும் சமமானவர்கள்; அவர்களுக்கு எல்லா விடயங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்றாலும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பல நெருக்கடிகள் உள்ளன. பிரதேசத்திற்குப் பிரதேசம் வித்தியாசமானது.

எல்லோருக்கும் சமமான நீதி தொடர்பில் கூறினாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனையில் இடம்பெறும் நெருக்கடியைக் கவனமாகப் பார்க்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதும், அவர்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்து அங்கு விவசாயம் செய்கின்றனர். அங்கு வதைக்கப்படும் பசுக்களின் உரிமையாளர்களுக்குப் பொலிஸில் முறையிட முடியாத நிலைமையே உள்ளது.

இங்கு சமமான நீதி என்ற விடயம் கேள்விக்குரியதாக இருக்கின்றது. இவ்வாறான விடயங்கள் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு தொடர்பான கேள்விக் குறியாக இருக்கின்றது.

எவ்வாறாயினும், சில விடயங்களில் அரசு எடுக்கும் முடிவுகளை வரவேற்கின்றோம். குறிப்பாக, அனோஜன் விடயத்தில் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம். எனினும், திருகோணமலையில் கோணேஸ்வர கட்டுமானத்தை முன்னெடுப்பதில் பல இடர்பாடுகள் உள்ளன. நாங்கள் தொல்லியல் திணைக்களத்தை எதிர்க்கவில்லை. ஆனால், தொல்லியல் என்ற போர்வையில் மத சுதந்திரம் பறிக்கப்படுவதனையும் பாதிக்கப்படுவதனையுமே எதிர்க்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில், மக்கள் தாம் வாழ்வதற்கான உறுதிப்பாடற்ற நிலையில் நாங்கள் பொருளாதார நலன்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த வரவு – செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதென்பது மிகவும் சவாலான விடயம்.

அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நாங்கள் வலுசேர்க்க முற்படும் அதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளது. இது தொடர்பான உத்தரவாதங்களை வழங்குமாறு ஜனாதிபதியைச் சந்திக்கும்போது கோரவுள்ளோம். சந்திப்புக்குப் பின்னர் பல விடயங்களைக் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

123 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

128 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

120 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

131 0 0