பட்ஜட் விவாதத்தில் சஜித் உரையாற்ற தொடங்கியமை கட்சியின் கூட்டு முடிவு.!
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில், கடந்த ஐந்து ஆண்டுகால வழக்கத்துக்கு மாறாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆரம்ப உரையை நிகழ்த்தியமைக்கான காரணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெளிவுபடுத்தியுள்ளார்.
இது கட்சியின் கூட்டுத் தீர்மானம் என்றும், இதில் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் விளக்கமளிக்கையில்,
“முன்னைய ஆண்டுகளைப் போன்றே இம்முறையும் வரவு – செலவுத் திட்ட விவாதத்துக்கான எதிர்க்கட்சியின் ஆரம்ப உரையை நானே நிகழ்த்துவேன் என ஆரம்பத்தில் எதிர்பார்த்திருந்தேன். எவ்வாறாயினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விவாதத்தைத் தொடக்கி வைப்பதே பொருத்தமானதாக இருக்கும் எனக் கட்சித் தலைமை தீர்மானித்தது.
இந்தத் தீர்மானம் கட்சி உறுப்பினர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாற்றம் குறித்து எனக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை. அந்தந்த நேரத்துச் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். நாம் ஒரு அரசியல் கட்சி. இது ஒரு பொதுவான தீர்மானமாகும்.
இந்த மாற்றம் கட்சியின் கூட்டுத் தீர்மானம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். இது தொடர்பில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.” – என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது எனது உரையைத் தயாரிப்பதில் ஏற்பட்ட மூன்று நாள் தாமதம், வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஆழமாக ஆராயவும் கற்கவும் எனக்கு மேலதிக நேரத்தை வழங்கியது. வழக்கமாக நான்தான் உரையைத் தொடங்குவேன். இது கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்து வந்த வழக்கமாகும். ஆனால், அந்த நேரத்தில் ஒரு கட்சியாக நாம் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையைப் பின்பற்றுவது அவசியமானதாக இருந்தது.” – என்றார்.


