உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எனது வாழ்க்கையிலேயே மிகவும் அதிக செலவை ஏற்படுத்திய நட்பு விராட் கோலியுடனானது!

99 பார்வைகள்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராக இருந்தபோது விராட் கோலி தனக்கு அளித்த ஆதரவு குறித்தும், இருவருக்கும் இடையே உருவான நட்பு குறித்தும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பாப் டு பிளெஸ்ஸிஸ் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், விராட் கோலியுடன் ஏற்பட்ட நட்பால் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வாங்கும் பழக்கம் தனக்கு வந்ததாகவும் அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாப் டு பிளெஸ்ஸிஸை ஆர்சிபி அணி வாங்கியது. அப்போது அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநராக இருந்த மைக் ஹெசன், அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“ஆர்சிபி அணியின் தலைவராக இருக்க விரும்புகிறீர்களா?” என்பதுதான் அந்தக் கேள்வி.

ஆர்சிபி அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட இருந்தார். அப்போது விராட் கோலி அவருக்கு அனுப்பிய செய்தி, அணி தலைவர் பொறுப்பை ஏற்கும் தயக்கத்தைப் போக்கியது.

இதுகுறித்து டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில், “விராட் கோலி எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில், ‘எனக்குப் பதிலாக உங்களை விட சிறந்த அணி தலைவர் யாரும் வர முடியாது. நீங்கள் அணிக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்தார்.

அந்த ஒரு செய்தியிலேயே அணி தலைவர் நான் பொறுப்பேற்பதை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது” என்றார்.

ஆர்சிபி அணியின் தலைவராக இருப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதையும் டு பிளெஸ்ஸிஸ் உணர்ந்திருந்தார். குறிப்பாக, பெங்களூரு ரசிகர்கள் விராட் கோலியை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் பொறுப்பை ஏற்கும்போது விராட் கோலியின் ஆதரவு எனக்கு மிகவும் அவசியம் என்று அவரிடமே கூறினேன். அவரது ஆதரவு இல்லாமல் இந்தப் பொறுப்பில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. அவர் ஒரு வார்த்தை சொன்னால்கூட எனது கேப்டன்சி பாதிக்கப்படலாம்.

ஆர்சிபி அணி ஒரு போட்டியில் தோற்றால்கூட, பெங்களூரு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் விராட் கோலியே மீண்டும் அணி தலைவராக வர வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக அப்படிக் கூறுவதில்லை. விராட் கோலியை அணி தலைவராக பார்க்க வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.

ஆனால், விராட் எனக்கு முழு ஆதரவு அளித்தார். அது இல்லாமல் இருந்திருந்தால் அந்த மூன்று ஆண்டுகளையும் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும்” என தெரிவித்தார்.

விராட் கோலி 2013 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியை வழிநடத்தி வந்தார். 2021 ஆம் ஆண்டு சீசனுக்குப் பிறகு தனது பணிச்சுமையைக் குறைத்து துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.

அதேபோல், தென் ஆப்பிரிக்க அணியின் அணி தலைவர் பொறுப்பில் இருந்து 2020 ஆம் ஆண்டு டு பிளெஸ்ஸிஸும் விலகியிருந்தார். இதனால் இருவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் இருந்தது.

இதுகுறித்து டு பிளெஸ்ஸிஸ் தெரிவிக்கையில்,

“நான் ஏற்கெனவே ஒரு அணியின் தலைவராக இருந்துவிட்டு, பின்னர் சாதாரண வீரராக விளையாடிய அனுபவத்துடன் வந்தேன். அதனால், விராட் கோலியின் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

எங்களுக்குள் முன்பே பெரிய நட்பு எதுவும் கிடையாது. ஆனால், ஆர்சிபி அணிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவர் எனக்கு முழு ஆதரவு அளித்தார். விரைவிலேயே நாங்கள் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்” என்றார்.

2022 முதல் 2024 வரை தொடர்ந்து 3 சீசன்கள் ஆர்சிபி அணியின் தலைவராக டு பிளெஸ்ஸிஸ் செயல்பட்டார். 2023 சீசனுக்குப் பிறகு அந்தப் பொறுப்பில் இருந்து விலகியபோதும், விராட் கோலியுடனான நட்பைத் தொடர்ந்து வந்தார்.

அதேபோல், கோலியால் தனக்கு ஏற்பட்ட மற்றொரு பழக்கத்தையும் அவர் குறிப்பிட்டார்.

“மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நான் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவராக மாறிவிட்டேன். இவ்வளவு பணத்தை ஒரு கைக்கடிகாரத்துக்காக எப்படிச் செலவு செய்கிறீர்கள் என்று இப்போது பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.

எனது வாழ்க்கையிலேயே மிகவும் அதிக செலவை ஏற்படுத்திய நட்பு விராட் கோலியுடனானது தான் என்று அவரிடமும் கூறியிருக்கிறேன். நான் வாங்கவே கூடாது என்று நினைத்த பல விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை வாங்குவதற்கு அவர்தான் காரணம்” என்று டு பிளெஸ்ஸிஸ் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

120 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

124 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

150 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

90 0 0