இஸ்ரேலிடமிருந்து ட்ரோன்கள் கொள்வனவு; ரவூப் ஹக்கீமின் விமர்சனத்திற்கு முபாறக் அப்துல் மஜீத் பதிலடி.!
இலங்கை அரசாங்கம் இஸ்ரேலிடமிருந்து ட்ரோன் இயந்திரங்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு, இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கடுமையான கண்டனத்தையும் பதிலடியையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியில் அமைச்சராக இருக்கும் காலப்பகுதியில் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் ஆதரவளிப்பதும், அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் எதிர்ப்புக் குரல் எழுப்புவதுமே கடந்த 26 வருட கால வரலாறாக இருந்து வருகின்றது.
இலங்கையிலிருந்து இஸ்ரேலை வெளியேற்றியது சுதந்திரக் கட்சியாகும். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மீண்டும் இஸ்ரேலை வரவழைத்தபோதும், அக்கட்சியுடன் இணைந்திருந்த ரவூப் ஹக்கீம் அதனை எதிர்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இஸ்ரேல் எதிர்க்கப்பட்டு பலஸ்தீனத்திற்குப் பூரண ஆதரவு வழங்கப்பட்டது. அதன் நினைவாகவே பலஸ்தீனில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், பின்னர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு இஸ்ரேலுக்கு மீண்டும் ஆதரவளிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும், நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும் அமைச்சரவையிலிருந்த ஹக்கீம் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்தார். தற்போது அமைச்சுப் பதவிகளோ சலுகைகளோ இல்லாத காரணத்தினால் மாத்திரமே அவர் இவ்விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளார்.
இஸ்ரேலிய ட்ரோன்கள் ஊடாக ஈரானைக் கண்காணிக்க முடியும் என ரவூப் ஹக்கீம் குறிப்பிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பானதாகும். அமெரிக்கா போன்ற வல்லரசுகளே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கையிலிருந்து கொண்டு இஸ்ரேலினால் ஈரானுக்கு எதிராக அவ்வளவு இலகுவாகச் செயற்பட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, இவ்வாறான அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து, ரவூப் ஹக்கீம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த கடந்த 30 வருட காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குப் பெற்றுக்கொடுத்த உரிமைகள் என்ன என்பதை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் என இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


