2035 வரை ஐசிசியின் முக்கிய கிரிக்கெட் தொடர்களை நடத்தும் வாய்ப்பை இழந்த இலங்கை!
2035ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) முக்கிய ஆடவர் கிரிக்கெட் தொடர்களை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், 2035ஆம் ஆண்டு வரையிலான முக்கிய கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கான நாடுகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, ஆசியப் பிராந்தியத்தில் நடைபெறவுள்ள முக்கிய கிரிக்கெட் தொடர்களை நடத்தும் வாய்ப்புகள் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, 2031ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை இந்தியாவும் பங்களாதேஷும் இணைந்து நடத்தவுள்ளன.
இதேவேளை, 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிகாண் கிரிக்கெட் தொடரை நடத்தும் பொறுப்பு பங்களாதேஷுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், 2035ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள ஐசிசியின் முக்கிய ஆடவர் கிரிக்கெட் தொடர்களை நடத்தும் வாய்ப்புகளில் இலங்கை இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.


