முச்சக்கர வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை!
தேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா அவர்கள் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது வரவு-செலவுத் திட்டத்திலும் நாட்டின் பல இலட்சக்கணக்கான மூன்று சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான எந்தவொரு நிவாரணமும் அல்லது திட்டமும் அறிவிக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மூன்று சக்கர வாகனத் துறையை நம்பி வாகன பழுதுபார்த்தல் கடை உரிமையாளர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், குத்தகை நிறுவனங்கள் மற்றும் சேவையாளர்கள் என நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை எந்தவித தீர்வும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மூன்று சக்கர வாகனங்களின் விலை பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சாதாரண பெட்ரோல் மூன்று சக்கர வாகனத்தின் விலை முன்னர் 9,35,000 ரூபாவாக இருந்த நிலை மாறி, தற்போது அது 20,89,000 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விலையும் 23,50,000 ரூபாவிற்கும் அதிகமாக விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பெருமளவு வறுமையிலும் சிரமத்திலும் உழன்று கொண்டிருக்கும் மூன்று சக்கர வாகன ஓட்டுநர்களின் வாகனக் கட்டணங்களைக் குறைக்கவும், உதிரிபாகங்கள் மற்றும் சேவைத்துறைகளில் நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இந்தத் துறை குறித்து அரசாங்கம் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.


