2027ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு.!
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்துப் பரிசீலித்தார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இதன்போது இணைந்துகொண்டார்.
‘டித்வா’ இயற்கை அனர்த்தம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய நெருக்கடி போன்ற பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான பாரிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் உயர்ந்த நிதிக்கட்டுப்பாட்டுடன் செயற்பட்டமையின் காரணமாக, நாட்டின் பல பிரதான பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தற்போதைய அரசு அடைந்துள்ளது என்றும், அதற்கமைய, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் இலக்கைத் தாண்டி, பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றமிக்க அபிவிருத்தியைப் பிரதான இலக்காகக் கொண்ட 2 ஆயிரம் பில்லியன் ரூபாய் முதலீட்டு ஒதுக்கீடுகளை உள்ளடக்கியதாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தப் பாதீட்டு ஆவணத்தை நாளை வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


