அனைத்து பகுதிகளுக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை வழங்குங்கள்.!
பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைத்து பகுதிகளுக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை வழங்குங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (03.11.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்களின் பாகுபாடான, பிழையான அரசியல், பொருளாதார கொள்கைகளும் மிக மோசமான நிர்வாக சீர்கேடுகளும் ஊழல் நிறைந்த ஆட்சி மற்றும் நிர்வாக முறைகளும் எமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்ததுடன் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்தது. அந்த நிலையே நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் கொண்டுவந்தது.
மக்கள் இந்த நாட்டில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றகரமான மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்தவகையில் கடந்தகால ஆட்சியாளர்கள் விட்ட அதே பிழைகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் பிராந்திய அபிவிருத்தி மற்றும் பிராந்தியங்களில் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஏற்றுமதித் துறையின் எதிர்காலம் குறித்தும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய பொருளாதார மையங்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
வடக்கு, கிழக்கு பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தி என்பது வெறுமனே ஒரு மாகாணத்தின் அபிவிருத்தி அல்ல; அது இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், அந்நியச் செலாவணி வருமான அதிகரிப்புக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பங்களிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
இலங்கை இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார சவால்களில் ஒன்று, நிலையான அந்நியச் செலாவணி வருமானத்தை உருவாக்குவதாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் பொருளாதார வரைபடத்தில் பின்தங்கிய பிராந்தியங்களாகத் தொடரக்கூடாது.
எமது பிராந்தியங்களின் கடல் வளங்கள், விவசாய வளங்கள், கனிம வளங்கள், மனித வளங்கள், அறிவுசார் ஆற்றல்கள் மற்றும் புவியியல் அமைவிடம் ஆகியவை முறையாகப் பயன்படுத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இலங்கையின் முக்கியமான ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மையங்களாக மாற்ற முடியும்.
யுத்தத்திற்குப் பின்னரான எமது பிராந்தியத்தின் அபிவிருத்தி என்பது வெறுமனே வீதிகள், பாலங்கள் மற்றும் கட்டடங்களை அமைப்பது மாத்திரமல்ல.
அது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகவும், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்துவதாகவும், எமது மக்களை சர்வதேச பொருளாதாரத்துடன் இணைப்பதாகவும் அமைய வேண்டும்.
நாம் எமது உற்பத்திகளை மூலப்பொருட்களாக மலிவான விலையில் விற்பனை செய்யும் நிலையிலிருந்து மாற வேண்டும். அவற்றைப் பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உலகச் சந்தையில் போட்டியிட வேண்டும்.
காங்கேசன்துறை துறைமுகம், தலைமன்னார் துறைமுகம், பலாலி சர்வதேச விமான நிலையம், வவுனியா விமான நிலையம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையம் ஆகியவை வெறுமனே போக்குவரத்து உட்கட்டமைப்புகளாக மாத்திரம் இருக்கக்கூடாது. அவை எமது மக்களின் பொருளாதார எதிர்காலத்திற்கான நுழைவாயில்களாக மாற வேண்டும்.
அரசாங்கம் பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
வடக்கின் வளர்ச்சி தெற்கின் வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. கிழக்கின் வளர்ச்சி தேசிய வளர்ச்சியிலிருந்து வேறுபட்டதல்ல.
வடக்கு வளர்ந்தால் இலங்கை வளர்கின்றது. கிழக்கு வளர்ந்தால் இலங்கை வளர்கின்றது.
நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும் பொருளாதார ரீதியாக வலுப்பெற்றால்தான் இலங்கை உண்மையான பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும்.
ஏற்றுமதி வளர்ச்சி என்பது வெறுமனே வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல அது எமது மக்களின் உழைப்புக்கு சர்வதேச மதிப்பை உருவாக்குவதாகும்.
எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பயன்படுத்தப்படாத வளங்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.
இன்றைய உலக பொருளாதாரம் பல்வேறு புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள், அரசியல் மோதல்கள் மற்றும் பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மைகள் உலக வர்த்தகத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கை போன்ற சிறிய திறந்த பொருளாதார நாடுகளுக்கு இத்தகைய நெருக்கடிகள் மிகப்பெரிய சவாலாகும்.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.6 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனால், இந்த வளர்ச்சியுடன் நாம் திருப்தியடைந்துவிட முடியாது. இலங்கை தனது ஏற்றுமதி வருமானத்தை மேலும் அதிகரித்து, அதிக மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் உலகச் சந்தைக்கு வழங்க வேண்டும்.
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் என்பது ஆடை, தேயிலை மற்றும் தெங்கு சார்ந்த பொருட்களை மாத்திரம் நம்பியிருக்கக் கூடாது.
உலகச் சந்தையில் அதிக கேள்வி உள்ள பல்வேறு உற்பத்தித் துறைகளில் இலங்கைக்கு போட்டித்தன்மையை உருவாக்க முடியும்.
இங்கு நான் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பொருளாதார வளங்களாகும்.
பல தசாப்தங்களாக ஏற்பட்ட யுத்தம், உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை, முதலீட்டுக் குறைபாடு மற்றும் சந்தை வாய்ப்புகளின் வரையறுக்கப்பட்ட அணுகல் காரணமாக எமது பிராந்தியங்களின் பொருளாதார ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் விவசாயம், மீன்பிடி, கடல்சார் வளங்கள், கனிம வளங்கள், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியக் கைத்தொழில்கள் போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.
வடக்கு மாகாணத்தின் முக்கிய ஏற்றுமதி வாய்ப்புகள் பனைசார் உற்பத்திகள், கடலுணவு ஏற்றுமதி, விவசாய மற்றும் விலங்கு வேளாண்மை உற்பத்திகள், பாரம்பரியக் கைத்தொழில், கனிம வளங்கள், சுற்றுலாத்துறை என்பனவாகும்.
இந்த உற்பத்திகள் அனைத்தையும் வெறுமனே மூலப்பொருட்களாக விற்பனை செய்யாமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதப்படுத்தி, தரப்படுத்தி, பொதியிட்டு, சர்வதேசத் தரச்சான்றிதழ்களுடன் ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை சர்வதேச ஏற்றுமதியாளர்களாக உருவாக்க முடியும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது, அப்பிராந்தியத்தின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்தியை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. அவை ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கான புதிய வாயில்களாகும். எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சர்வதேச வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுடன் இணைக்கும் முக்கிய உட்கட்டமைப்புகளாக அமைய முடியும்.
எனவே, இந்த உயரிய நாடாளுமன்றத்தின் ஊடாக அரசாங்கத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தனியான பிராந்திய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்,
காங்கேசன்துறை, தலைமன்னார் துறைமுகங்கள் மற்றும் பலாலி, வவுனியா மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு காலக்கெடுவுடன் கூடிய செயற்றிட்டத்தை அறிவிக்க வேண்டும்,
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்றுமதி சார்ந்த சிறப்பு பொருளாதார வலயங்களை உருவாக்க வேண்டும்,
பனைசார் உற்பத்திகள், கடலுணவு, விவசாயம், உணவுப் பதப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு விசேட நிதி மற்றும் வரிச் சலுகைகளை வழங்க வேண்டும்,
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச தரச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு அரசாங்கம் உதவ வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கில் நவீன குளிரூட்டப்பட்ட களஞ்சியங்கள், பொதியிடல் மையங்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வவுனியாப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஏற்றுமதி உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியுடன் இணைக்க வேண்டும், புலம்பெயர் இலங்கையர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு வெளிப்படையான முதலீட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஏற்றுமதி சார்ந்த தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு விசேட தொழில் முயற்சி நிதியத்தை ஏற்படுத்த வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஏற்றுமதி வளர்ச்சியை அளவிடுவதற்கான வருடாந்திர இலக்குகளையும் கண்காணிப்பு முறையையும் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.


