பொலிஸ் காவலில் உயி@ரிழந்த இளைஞனுக்கு நீதி வேண்டும் – எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்!
ஹோமாகம பொலிஸ் நிலைய காவலில் இருந்தபோது இஷார ஹர்ஷன என்ற இளைஞன் உயிரிழந்த சம்பவம் மற்றும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீவிர கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13(4) பிரிவின்படி காவலில் உள்ள ஒருவரின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையினரின் கடமையாகும். ஆனால், இஷார ஹர்ஷனவின் மரணம் மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை கடுமையாக மீறும் செயலாகும்.
இதற்கு வெளிப்படையான, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அரசினால் கொண்டுவரப்படவுள்ள “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம்” மற்றும் “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலம்” ஆகிய இரண்டும் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
இச்சட்டங்கள் பேச்சு சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் உரிமை மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பறித்து, நாட்டை ஒரு கட்சி ஆட்சி மற்றும் சர்வாதிகார காவல்துறை ஆட்சிக்கு நோக்கிச் செலுத்தும் முயற்சியாகும்.
தேசிய பாதுகாப்பு சர்வதேச தரநிலைகளுக்கு அமையவே உறுதி செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் பறிக்கும் அரசின் இந்த முயற்சிக்கு எதிராக மக்கள் சக்தியுடன் இணைந்து அதிகபட்ச தலைமையை வழங்கிப் போராடத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


