அட்டாளைச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சுறுத்தல்
அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (27) உட்புகுந்த காட்டு யானைகள், பயன்தரக்கூடிய 20 தென்னை மரங்களை பிடுங்கி அழித்து நாசப்படுத்தியுள்ளதுடன், நெல் களஞ்சிய அறையை உடைத்து ஐந்து நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தியுள்ளன.
நேற்றிரவு அதிகாலை 4.00 மணியளவில் புறத்தோட்டம் பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள், ஏ.ஆர். உபைதுல்லா என்பவருக்குச் சொந்தமான காணியில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 20 பயன்தரும் தென்னை மரங்களை முற்றாக அழித்துள்ளதுடன், அங்கிருந்த நெல் களஞ்சியக் கடையின் இரும்புக் கதவை உடைத்து உள்ளே இருந்த நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தியுள்ளன.
அதேவேளை, புறத்தோட்டம் பகுதியைத் தொடர்ந்து அருகிலுள்ள முல்லைத்தீவுக் கிராமத்திற்குள்ளும் ஊடுருவிய இவ் யானைகள், அங்குள்ள அல்-ஜெஸீறா வித்தியாலயத்தின் சுற்று மதிலையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.
குறிப்பிட்ட இந்த இரண்டு காட்டு யானைகளும் குடியிருப்பு வீடுகளுக்குள் நுழைய முயன்ற போது, விழிப்படைந்த கிராம மக்கள் வீதிகளுக்கு இறங்கி சத்த வெடில்களைக் கொளுத்தியும் கூச்சலிட்டும் யானைகளை விரட்டியடித்துள்ளனர். பொதுமக்களின் இந்த உடனடி நடவடிக்கையினால் ஏற்படவிருந்த மேலும் பாரிய உயிரற் சேதங்களும் சொத்துச் சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.
அப்பகுதியின் எல்லைப் பகுதியில் யானை வேலிகளை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் நீண்டகாலமாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, புறத்தோட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உட்புகுந்து பொதுமக்களின் உடமைகளையும், விவசாயப் பயிர்களையும் அழித்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் உடனடியாக தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




















