உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செஞ்சிறகுகள் விமானவியல் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விமானவியல் தின விழா.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
99 பார்வைகள்

கல்வி என்பது மாணவர்களை ஏற்கனவே அறிந்த பாதைகளில் மட்டுமே பயணிக்கச் செய்வதல்ல, அவர்கள் செல்லக்கூடிய புதிய பாதைகளையும் அறிமுகப்படுத்துவதாகும். அந்த வகையில், விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த அறிவையும் தொழில் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் செஞ்சிறகுகள் விமானவியல் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விமானவியல் தின விழா – 2026 நிகழ்வு இன்று (28.10.2026) புதன்கிழமை அக்வினாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான அறிவையும் ஆர்வத்தையும் மாணவிகளிடையே வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் எமது வானில் பறந்த விமானங்கள் பலருக்கு அச்சத்தையும் அழிவின் நினைவுகளையும் ஏற்படுத்தியிருந்தன. ஆனால், காலம் மாறியுள்ளது. இன்று விமானப் போக்குவரத்து உலக நாடுகளை ஒன்றிணைப்பதுடன், பொருளாதாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது. எனவே, விமானங்களைக் கண்டு அஞ்சிய பழைய தலைமுறையைப் போலன்றி, புதிய தலைமுறை விமானப் போக்குவரத்துத் துறையைக் கற்றறிந்து, அதில் பணியாற்றி, அதன் எதிர்காலத்தை உருவாக்க முன்வர வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

இப்பாடசாலை மாணவிகள் ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்து, தாங்கள் முன்னெடுத்துவரும் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த செயற்பாடுகளை விளக்கியபோது மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாடநூல் கல்விக்கு அப்பால் புதிய துறைகளை அறிந்துகொண்டு, அவற்றில் தமது எதிர்காலத்தை உருவாக்க மாணவர்கள் சிந்திப்பது பாராட்டுக்குரியது என்றார். இம் முயற்சிக்கு ஆதரவளித்த பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஜெனிட்டா ஷயாமினி அவர்களையும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இச்செயற்பாட்டை முன்னெடுத்துவரும் ஏரோவிங்ஸ் ஏவியேஷன் அன்ட் மரிடைம் அமைப்பின் தலைவர் உதயகுமார் டெனிஸ்டன் அவர்களையும் ஆளுநர் பாராட்டினார்.

அதேவேளை, இத்தகைய புதிய துறைகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் சில பாடசாலைகளில் மாணவர்களுக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை என்பது கவலைக்குரியது எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாணவர்களின் திறமைகளை மதிப்பிடுவதற்கு முன்னர், அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார். ஏரோவிங்ஸ் போன்ற அமைப்புகள் மாணவர்களுக்கு வழங்கும் வாய்ப்புகளை ஊக்குவிக்குமாறும், புதிய தொழில்துறைகள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளைத் திறந்துவைக்குமாறும் பாடசாலை அதிபர்களையும் கல்வி அதிகாரிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

விமானப் போக்குவரத்துத் துறை என்பது விமானியாகும் வாய்ப்பை மட்டும் கொண்டதல்ல என வலியுறுத்திய ஆளுநர், விமானப் பொறியியல், விமானப் பராமரிப்புத் தொழில்நுட்பம், விமான நிலையச் செயற்பாடுகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, விமானப் பணியாளர் சேவை, சரக்குக் கையாளுகை, பயணிகள் சேவை, விமானப் பாதுகாப்பு மற்றும் விமானச் செயற்பாட்டுத் திட்டமிடல் எனப் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். இத்துறைகளில் பெண்களும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்குப் பரந்த வாய்ப்புகள் உள்ளதாகவும், பாலினம் அவர்களது கனவுகளுக்கு எல்லையாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அனைவரும் மருத்துவர்களாகவோ, பொறியியலாளர்களாகவோ, ஆசிரியர்களாகவோ அல்லது அரச அலுவலர்களாகவோ மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் பல்வேறு திறன்களைக் கொண்ட மனித வளம் அவசியம் எனத் தெரிவித்த ஆளுநர், மாணவர்கள் தமது ஆர்வத்தையும் திறமையையும் கண்டறிந்து, அதற்கேற்ற துறைகளில் முன்னேற வேண்டும் என்றார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் முன்னேற விரும்பும் மாணவிகள் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கில மொழி மற்றும் கணினி அறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், தொடர்பாடல் திறன், குழுவாகச் செயற்படும் பண்பு, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.

பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் இத்துறையில், துல்லியமாகச் சிந்தித்தல், பொறுப்புடன் செயற்படுதல் மற்றும் தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவை அத்தியாவசியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் பாடசாலை மாணவர்களிடையே விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான முயற்சிகள் மாணவர்களின் ஆர்வத்தை நடைமுறை அறிவாக மாற்றுவதற்குத் துணைபுரியும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இப்பாடசாலையில் இன்று உருவாக்கப்படும் ஆர்வம் எதிர்காலத்தில் விமானிகளையும், பொறியியலாளர்களையும், விமான நிலைய முகாமையாளர்களையும், விமானப் போக்குவரத்துத் துறைசார் நிபுணர்களையும் உருவாக்கும் என நம்பிக்கை வெளியிட்டார். இம்முயற்சி வடக்கு மாகாணத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த அறிமுக நிகழ்வுகள், கரும்பெட்டிச் சவால் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் மற்றும் விமானப் பணியாளர் சேவை, விமான நிலையச் செயற்பாடுகள் தொடர்பான அறிமுகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன.

இறுதியாக, ‘ஒரு காலத்தில் எமது வானம் அச்சத்தின் நினைவுகளைச் சுமந்தது, இனி அந்த வானம் எமது பிள்ளைகளின் கனவுகளையும் சாதனைகளையும் சுமக்கட்டும்’ எனத் தெரிவித்த ஆளுநர், மாணவிகளின் எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது.!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா, இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக 50 அம்சப் பிரேரணை; விவாதத்தைத் தவிர்க்க அரசு முயற்சி.!

தேசிய மக்கள் சக்தி அரசின் சபாநாயகருக்கு எதிராக, அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியில் கையாளுதல் உள்ளிட்ட 50 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று…

68 0 0
இலங்கை செய்திகள்

எதிராளிகளை முடக்கப் பார்க்கும் அநுர அரசு.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்லாமல், தமது அரசியல் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடக்கி வைப்பதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று…

74 0 0
இலங்கை செய்திகள்

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு.!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாக தமது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு இன்றையதினம் புதன்கிழமை (28) மன்னார் மாவட்டச்…

78 0 0