நீதிமன்றத்தில் உயிரை மாய்க்க முயன்ற சந்தேகநபர்கள்; அங்கு பெரும் பரபரப்பு.!
திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கின் சந்தேகநபர்கள் மூவர் நீதிவான் முன்னிலையிலேயே குற்றவாளிக்கூண்டில் வைத்து பிளேட்டினால் தங்களது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட கைதிகளில் மூவர் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நிலாவெளிப் பகுதியில் வைத்து சட்டவிரோதமான கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலைத் தலைமையகப் பொலிஸாரினால் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அதில் மூவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிளேட்டினால் தங்களது கழுத்தைத் தாங்களே அறுத்துக் கொண்டனர். இதன்போது இரத்தம் அதிகளவில் சீறிப்பாய்ந்து பரவியதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
முகேஸ், அஜித்திரன் மற்றும் ரம்ஸான் ஆகிய மூவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் முகேஸ் என்பவரின் கழுத்தில் ஏற்பட்ட வெட்டுக் காயம் ஆழமாக இருந்ததால் அதிகளவிலான இரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸாரும் நீதிமன்ற அதிகாரிகளும் காயமடைந்த மூவரையும் மீட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுத் தையல்கள் போடப்பட்டுள்ளன என்றும், தற்போது அவர்கள் நலமாக இருக்கின்றனர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கைக்குண்டு மற்றும் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.


