இலங்கையின் இளம் கால்பந்து வீரர்களுக்கு சர்வதேச வாய்ப்புகள்!
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பிஃபா (FIFA) தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோவுக்கும் (Gianni Infantino), விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையிலான இலங்கை உயர்மட்டக் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கால்பந்து விளையாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதிநிதிகள் குழுவில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜாஸ்வர் உமர், தேசிய விளையாட்டுச் சபையின் தலைவர் பிரியந்த ஏகநாயக்க மற்றும் உயர் செயல்திறன் மையத்தின் தலைவர் பிரசன்னா ஜெயலத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ, சர்வதேச கால்பந்து சம்மேளனம், இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நேர்மறையான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இளம் கால்பந்து திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான சரியான வழிகாட்டல்களையும் வாய்ப்புகளையும் உருவாக்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது நடைபெற்று வரும் பிஃபா 15 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடர் போன்ற போட்டிகள், சிறுவர்கள் சர்வதேச அனுபவத்தைப் பெறவும், சர்வதேச அரங்கில் தாய்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பெருமளவில் உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


