வங்காள விரிகுடாவில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; மழை அதிகரிக்க வாய்ப்பு.!
வங்காள விரிகுடாவின் வட அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது நாளையளவில் மேலும் தீவிரமடைந்து சக்தி மிக்க தாழமுக்கமாக மாறி மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும். இது நாளை மறுதினம் காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் ஒரு சூறாவளியாக வலுவடையும். தொடர்ந்து வருகின்ற இரண்டு நாட்களில் இந்தியாவின் தமிழ் நாட்டின் ஆந்திரப் பிரதேசத்தின் வட பகுதியுடனும் ஒடிசா கரையின் தென் பகுதியுடனும் ஊடறுத்து செல்லக்கூடும்.
இது இலங்கையை நேரடியாகத் தாக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், இதன் காரணமாக உருவாகும் காற்று இலங்கையின் குறுக்கே நீடிப்பதால், எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, வட மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


