தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு இணக்கம்!
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை எதிர்காலத்தில் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், அதுவரையான நிலைமாற்றுக் காலத்தில் இரு நிர்வாகங்களும் இணைந்து செயற்படுவதற்குப் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் மத்திய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினரின் பங்கேற்புடன் இன்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமையை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனக் குறிப்பிட்டார். மருத்துவமனையின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்குப் பெருமளவு நிதி தேவைப்படுவதுடன், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நோயாளர்கள் வருகை தரும் நிலையில், அதன் சேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
மாகாண சபைக் காலத்தில் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டம் காரணமாக, மாகாண மருத்துவமனைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை மாத்திரம் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினர், ஏனைய புற்றுநோய் மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள போதிலும், தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இருப்பதால் நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறை நிர்வாக நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
மருத்துவமனை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும் வரையான காலப்பகுதியில், அதற்குத் தேவையான ஏனைய சுகாதார வசதிகளையும் வளங்களையும் பெற்றுக்கொள்வதில் சவால்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தனர். எனவே, நிலைமாற்றுக் காலத்தில் மத்திய – மாகாண நிர்வாகங்களும் வளங்களைப் பகிர்ந்து, மருத்துவமனையின் சேவைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்தனர்.
இதனடிப்படையில், மருத்துவமனையை எதிர்காலத்தில் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதுவரையான இடைக்காலத்தில் மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்கள் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளவும், இதற்குரிய அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஆளுநரும் மாகாண நிர்வாக அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், நிதிக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர், மத்திய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், திட்டமிடலுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

