இலங்கை, மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு அபராதம் விதிப்பு!
ராவல்பிண்டியில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மெதுவாக பந்துவீசியமைக்காக இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பாகிஸ்தான் அணி 2 ஓவர்களைக் குறைவாக வீசியதால், அந்த அணியின் வீரர்களுக்குப் போட்டித் தொகையிலிருந்து 10 சதவீதமும், இலங்கை அணி 1 ஓவரைக் குறைவாக வீசியதால், அணியின் வீரர்களுக்குப் போட்டித் தொகையிலிருந்து 5 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி நடுவர் ஜெஃப் குரோ (Jeff Crowe) இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தை விதிகளின் 2.22 பிரிவின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டித் தொகையிலிருந்து 5 சதவீதம் அபராதமாக அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


