அடிப்படை வசதிகளற்ற இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் முதலிடம்!
மன்னார் மாவட்டத்தின் இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம், போதிய அடிப்படை வசதிகள் இன்றி மூன்று பணியாளர்களுடன் சிறப்பாகச் செயற்பட்டு, தேசிய ரீதியில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கையில் உள்ள 3,440 உபதபால் அலுவலகங்களில் ஒன்றான இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம், 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக வருமான ரீதியான தரப்படுத்தலில் சிறப்பான நிலையைப் பேணி வருகின்றது.
குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள 609 தபால் அலுவலகங்களையும் விட வருமான ரீதியாக முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், 2025–2026ஆம் ஆண்டுக்கான உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, கொழும்பு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சேவைச் சிறப்புக்கான சான்றிதழும் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகளின்றியும் சாதனை!
மூன்று பணியாளர்களை மட்டுமே கொண்டு இயங்கும் இவ்வலுவலகத்தில், போதிய உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் இத்தகைய சாதனை எட்டப்பட்டுள்ளது
எனினும், இவ்வளவு சிறப்பான வருமானத்தையும் சேவைத் திறனையும் வெளிப்படுத்தும் அலுவலகத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனக் கவலை வெளியிடப்படுகிறது.
🔴தபால் அலுவலகமாகத் தரமுயர்த்தப்படுமா?
வருமான ரீதியாகச் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து வரும் இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகத்தை முழுமையான தபால் அலுவலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
ஆனால், இலங்கைத் தபால் திணைக்களமும் வடமாகாண தபால் நிர்வாகமும் இவ்வலுவலகத்தின் தேவைகள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி சார்ந்த தரப்பினரால் சுட்டிக்காட்டப்படுகிறது.



