திம்புள்ள பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பழைய மாணவர்களால் கௌரவிப்பு!
திம்புள்ள பாடசாலையின் 95 ஆம் ஆண்டு பழைய மாணவர் குழுவினரால், புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது.
இதன்போது, பத்தனை தமிழ் வித்தியாலயம், மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயம் மற்றும் திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பரீட்சை வெற்றிக்கும் வழிகாட்டிய ஆசிரியர்களும் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
கடந்த ஏழு வருடங்களாக இப்பிரதேசத்திலுள்ள ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் புலமைப்பரிசில் பரீட்சைக்கான செயலமர்வுகளை இந்தப் பழைய மாணவர் குழுவினர் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியில் பழைய மாணவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புக்கு முன்னுதாரணமாகத் திகழும் இக்குழுவினரின் செயற்பாடுகள், மலையகப் பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகக் கருதப்படுகின்றன.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களையும் கௌரவித்து வரும் 95 ஆம் ஆண்டு பழைய மாணவர் குழுவினரின் இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும்.
இந்நிலையில், திம்புள்ள பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பங்களித்து வரும் 95 ஆம் ஆண்டு பழைய மாணவர் குழுவினருக்குப் பிரதேசப் பாடசாலைகள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிக்கப்படுகின்றன.


