மஸ்கெலியா பிரதேச சபையின் அபிவிருத்திப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்.!
மஸ்கெலியா பிரதேசசபை தவிசாளரின் வேண்டுகோளுக்கிணங்க மஸ்கெலியா பிரதேச சபையின் அபிவிருத்திப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, மஸ்கெலியா எஸ்டேட் பகுதியில் சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களின் கீழ், உள்ளூராட்சி அமைச்சின் திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் மூன்று பாலங்கள் அமைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கிலியா எஸ்டேட் பகுதியில் இப்பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் போது, அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், அன்றாடப் பயணங்கள் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தோட்டப்புற மக்களின் நீண்டகால போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கலந்துகொண்டதுடன், கௌரவ உபதவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் தோட்டப்புற மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
தோட்டப்புறங்களும் நகர்ப்புறங்களும் சமமாக அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே மஸ்கெலியா பிரதேச சபையின் அபிவிருத்திப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் வரவேற்கத்தக்கவை.




