மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
மயிலத்தமடு – மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேற்றி அங்கு அத்துமீறிய விவசாயிகளுக்கு இடமளிக்கும் வகையில் பொலிஸாரும் மகாவலியும் செயற்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி தமது மேய்ச்சல் தரை காணிகளை தமக்கு பெற்றுத்தர ஜனாதிபதியும் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில சிங்கள விவசாயிகள் போலியான காணொளிகளை வெளியிட்டு கால்நடை பண்ணையாளர்களை பிழையாக சித்தரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதன்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன் பேசுகையில்:
“நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரையிலே, இன்று ஆறாம் மாதத்தில் இருந்து பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம்.
ஆறாம் மாதத்தில் இருந்து எங்களை வெளியேற்றி, பலதரப்புகளிடமும் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. எந்தத் தரப்பும் பயிர் செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டு, இறுதியில் மகாவலியால் அந்த நிலங்கள் வழங்கப்பட்டு, எங்களைக் காட்டில் மாடுகளைக் கட்டுமாறு கூறுகிறார்கள்.” “பண்ணையாளர்களாகிய எங்களுக்குத்தான் காட்டில் வாழும் வாழ்க்கை பற்றித் தெரியும், அவர்களுக்கு அது தெரியாது. எங்களாலும் எங்கள் கால்நடைகளாலும் காட்டில் வாழ முடியாத சூழ்நிலையில் இந்த ஊடகச் சந்திப்பிற்கு வந்துள்ளோம்.
அரசாங்க அதிபரைச் சந்தித்து நிலைமைகளைக் விளக்கியபோதும், காட்டில் மாடுகளைக் கட்ட முடியாது என்பதையும், எல்லைப் பகுதிகளில் மாடுகளை மேய்க்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
15 வருடங்களாகக் கஷ்டப்பட்டு, அடிகளையும் அவமானங்களையும் சந்தித்து வாழும் எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேன்மை தங்கிய ஜனாதிபதியாலும் விவசாய அமைப்பினராலும் எங்களக்கென ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு மாதவனை நிலத்தை எமக்கு மீண்டும் பெற்றுத்தர வேண்டும். எங்களால் காட்டில் சென்று வாழ முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் எந்தச் சிங்களச் சகோதரர்களுடனும் முரண்படவில்லை. இந்த முரண்பாடுகளை உருவாக்க அமைப்புகளும் பொலிஸாரும்தான் காரணம். பொலிஸார் தினமும் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்துகிறார்கள். நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலையிலும் பொலிஸ் தரப்பிலிருந்து அழைப்பு மேற்கொண்டு எங்களை வெளியேறுமாறு கூறினார்கள்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட சில காணொளிகள் தவறானவை. பயிர்களை அழிப்பதாகக் கூறப்படும் காணொளிகள் மயிலத்தமடு பகுதியில் எடுக்கப்பட்டவை அல்ல, அவை அம்பாறை மாவட்டத்தின் திவில்பத்தான பகுதியில் எடுக்கப்பட்டவை. தவறான காணொளிகளைப் பரப்பி தமிழ் பண்ணையாளர்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
தயவுசெய்து ஜனாதிபதி அவர்கள், சிவில் சமூகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தலையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எமது மேய்ச்சல் தரையை எமக்கு மீட்டுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.


