முல்லைத்தீவில் காருண்யம் மற்றும் இரக்கம் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் அமைந்துள்ள கெத்செமனே சுவிஷேச தேவாலயத்தின் ஊடாக இயங்கி வரும் காருண்யம் மற்றும் இரக்கம் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான முறையில் நேற்றையதினம் (05.10.2026) இடம்பெற்றிருந்தது.
“சிறுவர்களின் கனவுகளை வளர்ப்போம்; வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் 490 சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர்.
காருண்யம் மற்றும் இரக்கம் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பணிப்பாளர் போதகர் பி. செல்வநாயகம் தலைமையில் அதன் நிர்வாக செயலாளர் கு.அகிலன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பணியாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் விருந்தினர்களும் சிறுவர்களும் பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு
சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ப. பரணிதரனும், விசேட விருந்தினர்களாக வள்ளிபுனம் கெத்செமனே சுவிஷேச தேவாலய நிறுவனர் போதகர் எஸ். பெரியசாமி, எல்ஷடாய் தேவாலயத்தின் பாஸ்டர் பிரேமமோகன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பெண் உப பொலிஸ் பரிசோதகர் றுபேறூ, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதம முகாஉமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி தர்ஜினி, மு/மன்னாங்கண்டல் பாடசாலை அதிபர் எஸ். தினேஷ்குமார், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். விஜயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறுவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறுவர் தினக் கொண்டாட்டத்தை சிறப்பித்தனர். நிகழ்வில் சிறுவர்களின் மகிழ்ச்சியையும் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













