அரசை வீழ்த்த ஒன்றுபடுங்கள்.!
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறியுள்ள தற்போதைய அரசு, நாட்டு மக்களை ஏமாற்றி, இனவாதத்தைத் தூண்டிவிட்டு அதிகாரத்தைத் தக்கவைக்க முயல்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் மற்றும் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலால்தீன் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன்போது சமன்பிரிய ஹேரத் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:-
“ஜனாதிபதி பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருகின்றது.
2025 ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கோ கற்பிப்பதற்கோ வழியில்லாத நிலை உள்ளது. பல்கலைக்கழக அமைப்பில் தற்போது 6 தொகுதி மாணவர்கள் தங்கி நிற்கும் முடக்கம் ஏற்பட்டுள்ளது என மூத்த விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கு நியாயமான விலை இன்மை, மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை, 323 கன்டெய்னர்கள் தொடர்பான பிரச்சினை, பாரிய ஹேக்கிங் தாக்குதல் மூலம் நாட்டின் பணம் கொள்ளையடிக்கப்பட்டமை மற்றும் எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றுக்கு அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை.” – என்றார்.
ஹசன் அலால்தீன் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு,

“நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே அரசு முயற்சிக்கின்றது.
இந்த அரசு கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியை நடத்தப் பார்க்கின்றது.
நாட்டின் மொத்தச் சனத்தொகையில் நான்கில் ஒருவர் வறுமையில் வாடுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இளைஞர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசுக்கு எதிரான வலுவான அரசியல் முகாம் தற்போது உருவாகி வருகின்றது.
பிரதான எதிர்க்கட்சியில் சிதறிக்கிடக்கும் அனைத்துத் தரப்பினரும் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுபட்டு இந்த ஆட்சியை வீழ்த்த அணிதிரள வேண்டும்.” – என்றார்.