நாட்டில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தேசிய பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் 860 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இதுவரை பதிவான மொத்த எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 403 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதிவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொற்று கண்டறியப்பட்ட வீதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.
புதிதாகக் கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் ஆண்களின் விகிதமே அதிகமாகக் காணப்படுவதுடன், ஆண்-பெண் விகிதம் 7:1 என்ற வீதத்தில் பதிவாகியுள்ளது.
நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியிலும் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகப் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் 21 நாடுகளில் எச்.ஐ.வி. பரவல் அதிகரித்து வருகின்றது என்று ஐ.நா. எய்ட்ஸ் அமைப்பின் தரவுகள் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.