துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது.!
அஹுங்கல – கல்வெஹெர பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் காலி மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அஹுங்கல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் காயமடைந்தார்.
சம்பவம் தொடர்பாக காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பகுதியிலேயே வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது கிடைத்த தகவலுக்கு அமைய, இந்தக் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்று கல்வெஹெர பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றப்பிரிவினர் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.