முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது! : பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!!
முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபராக இருந்தாலும் அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“நாம் அமைச்சு என்ற வகையில் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது நாட்டில் முன்னர் பிரபல நபர்களைப் பார்த்துச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலமும், பக்கச்சார்பாகச் செயற்பட்ட காலமும் இருந்தது.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பின் 12 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது.
இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையும் நிலையில், முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபராக இருந்தாலும், கிராமத்தில் இருக்கும் சாதாரண குடிமகனாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமமாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளோம். நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டியது அவசியமாகும்.
போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் அந்த நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மருந்தக உரிமையாளர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களை இலக்காகக் கொண்டு சில மருந்தகங்கள் மற்றும் ஆயுர்வேத நிலையங்களின் பெயருக்கு மறைவாகச் சட்டவிரோதப் போதைப்பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன என்று அமைச்சுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.