புதிய குளம் அமைக்கும் பணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிதியுதவி!
புத்தூர்–மீசாலை வீதியில் கிரீன் லேயர் அமைப்பால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நேரில் விஜயம் செய்தார்.
இதன்போது, நீர்வளங்களைப் பாதுகாத்து எதிர்காலத் தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அமைப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
புத்தூர்–மீசாலை வீதியில் கிறீன் லேயர் அமைப்பால் புதிய குளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக்கான பாராட்டுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்தார்.
11 நாட்களாக தொடர்ந்த இப்பணிகளை நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனடா வாழவைப்போம் அமைப்பின் ஸ்தாபகர் கிருஷ்ணர் மற்றும் அவரின் நண்பர் வசந்தகுமாரும் இணைந்து வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கிறீன் லேயர் அமைப்பிடம் கையளித்தார்.
குறித்த குளத்தை மையப்படுத்தி எதிர்காலத்தில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
புதிய குளம் அமைக்கும் பணிகள் மழை ஆரம்பிக்கும் வரையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னர் அடுத்த ஆண்டு இரண்டாம் கட்டமாக எஞ்சிய பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கிறீன் லேயர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.