சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொத்துக்கள் முடக்கம்.!
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் போதைப்பொருள் கடத்தல் மூலமாக சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த விசாரணையின் போது, போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தில் சந்தேகநபர்களான பெண்ணின் பெயரில் கடுனேரிய பகுதியில் பெண்ணின் பெயரில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள சுமார் 95 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24.8 பேர்ச் காணி மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள சுமார் 3.5 கோடி ரூபாய் பெறுமதியான இருமாடி வீடு போன்ற சொத்துக்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் விதப்புரைகளுக்கு அமைவாக, சுமார் 44.5 மில்லியன் ரூபாய் மொத்த பெறுமதியுடைய குறித்த சொத்துக்களை நேற்று வெள்ளிக்கிழமை (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குப் பயன்பாட்டிலிருந்து முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.